* அவள் உங்களை நேசிக்கிறாளா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
உடல்மொழிகள் மூலமாக பெண்ணின் மனதை அறிந்து கொண்டு, அவளை நெருங்கிச் செல்லுங்கள். காதலில் வெல்லுங்கள். இதோ பெண்ணின் காதலை கண்டுபிடிக்க சில உடல்மொழிகள்...
1. நீங்கள் அவளின் கண்களைப் பார்த்துப் பேசும்போது வெட்கப்படுகிறாளா? கன்னம் சிவந்துபோகிறதா? கண்கள் ஒளி நிறைந்து, முகத்தின் புன்னகை ஒட்டிக் கொள்கிறதா? அப்படியெனில் உங்களின் உரையாடலை அவள் விரும்புகிறாள். உங்கள் மீது அவளுக்கு நேசம் துளிர்த்திருப்பதாக நம்பிக்கை கொள்ளலாம். வழக்கத்தைவிட அதிகமாக வெட்கப்படுவதை அறிந்தால் அது காதலை மேலும் உறுதிப்படுத்தும். சில பெண்கள் வெட்கப்பட்டுக் கொண்டு விலகிச் செல்வது உண்டு. அப்போது நெருங்கிச் செல்ல வேண்டாம். விட்டுப்பிடியுங்கள்.
2. உங்களுடன் இருக்கும்போது உற்சாகமாக இருக்கிறாளா? அவளது குழந்தைத்தனமான குறும்புகள் வழக்கத்தைவிட அதிகமாகிறதா? காதலில் விழுந்தவர்களே பெரும்பாலும் காதலர் முன் இப்படி குழந்தைத்தனமாக இருப்பார்கள். மென்மையான குரல், சந்தோஷமாக கத்திப் பேசுவது, அங்குமிங்கும் தாவி, ஓடி மகிழ்வது, சத்தமாக சிரிப்பது என உங்கள் பார்வைகள், கவனம் முழுவதும் அவள் மீது இருக்கும்படி நிறைய விஷயங்களைச் செய்தால் நிச்சயம் அவளுக்கு உங்கள் மீது விருப்பம் இருக்கிறது.
3. உங்களை மற்றவர்களைவிட முக்கியத்துவம் மிக்கவராக நினைத்தால் பெண்கள் நிச்சயம் பரிசுப் பொருளுடன் உங்களை சந்திப்பார்கள். பிறந்தநாள், காதலர் தினம் என்றில்லாமல் ஒவ்வொருமுறை உங்களைச் சந்திக்கும்போதும் கூட ஏதாவது ஒன்றை பரிசாக தர விரும்புவார்கள். அதே நேரத்தில் பிறந்தநாள் போன்ற முக்கியமான நாளாக இருந்தால் மற்றவர்களைவிட தனது பரிசு உங்கள் கவனத்தை ஈர்க்க வேண்டுமென்பதில் அதிக கவனம் செலுத்தி வித்தியாசமான பரிசை உங்களுக்கு வழங்குவாள். பரிசு சாதாரணமாக இருந்தாலும் கூட அதை தரும் முறையில் அன்பு அதிகம் வெளிப்படலாம்.
4. பெண் ஒருத்தி உங்களை நேசிக்கத் தொடங்குகிறாளா? என்பதை அவள் கேட்கும் கேள்விகளில் இருந்து நிச்சயம் கண்டுபிடிக்கலாம். உங்களைப் பற்றியும், வாழ்க்கை பற்றியும் நிறைய கேள்வி கேட்டால் அதை காதலின் அறிகுறியாக கருதலாம். உங்கள் பொழுதுபோக்கு எது? பிடித்த நிறம் எது, உடை எது? என்று சின்னச்சின்ன விஷயங்களைக்கூட அவள் கேட்டுக் கொண்டே இருப்பாள். அப்படியே உங்களது எதிர்கால திட்டம் பற்றியும் இடையிடையே விசாரிப்பாள். அவர்களின் ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் ஈடேறும்படியாக இருந்தால் அவர்களின் நேசிப்பு இன்னும் அதிகமாகும். எனவே பெண்ணின் கேள்விகளை உதாசீனப்படுத்தாமல், அவர்களை கவரும் வகையில் பதிலளித்துப் பழகுங்கள். காதல் கனியும்.
5. நீங்கள் உற்சாகமின்றி இருக்கும்போதோ, சோகமாக பாடிக் கொண்டிருக்கும்போதோ? உங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக வேடிக்கை செய்வது, கேள்வி கேட்பது என சூழ்நிலையை மாற்ற முயற்சிக் கிறாளா? உங்களை கலகலப்பூட்டுவதற்காக வினோதமாக நடந்து கொள்கிறாளா? உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதை செய்கிறாளா? அவளுக்கு உங்கள் மேல் அன்பு இருப்பதை உறுதி செய்யலாம்.
6. உடையும், கூந்தல் அலங்காரமும் உங்களை சந்திக்கும்போது நேர்த்தியாக இருக்கிறதா? அழகழகான உடைகள், விதவிதமான சிகை அலங்காரம் என்று மாற்றிக் கொண்டு வருகிறார்களா? இதை நிச்சயம் உங்களை கவர முயலும் உடல் மொழிகள£க எடுத்துக் கொள்ளலாம். உங்களை சந்திக்க வரும் முன்பு நீண்ட நேரம் மேக்–அப் செய்ய செலவிடுவார்கள். இந்த அறிகுறிகள் தெரிந்தால் நீங்கள் நிச்சயம் அவரது உடை, ஜடை எல்லாவற்றையும் பாராட்டுங்கள். முடிந்தால் கவிதையாக பொழியுங்கள். நிச்சயம் காதல் கைகூடும்.
7. ஆண்கள்தான் பொதுவாக பேச்சை ஆரம்பிப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் பெண் உங்களை நேசிக்கத் தொடங்கிவிட்டால் அவளாக பேச்சை ஆரம்பித்துவிடுவாள். முதலில் பொதுவான விஷயங்களில் தொடங்கும் அவளின் உரையாடல், அப்படியே உங்கள் காதல் வாழ்க்கைக்குள் நுழைந்துவிடும். அப்போது சம்பந்தமில்லாமல் எதையோ கேட்டுக் கொண்டிருக்கிறாளே? என்று நீங்களாக குறுக்கிட்டு வேறுபக்கம் பேச்சை திசைதிருப்பிவிடாதீர்கள். அவள் அடுத்து என்ன பேசுவது என்று யோசிக்கும் வேளையில் நீங்களாக புதிய விஷயம் ஒன்றை எடுத்துக் கொடுத்து, உரையாடலை இனிமையாக்கி, காதலையும் கனிய வைக்கலாம்.
8. நீங்கள் அவளுடன் இருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறாளா? முகம் மலர்ச்சியாக இருக்கிறதா? உரையாடல் உற்சாகமாக உள்ளதா? பார்வைகள், பாவனைகள் இதமாக இருக்கிறதா? அடிக்கடி உங்களை பார்த்து சைகை செய்கிறாளா? மீண்டும் மீண்டும் புன்னகை புரிகிறாளா? இவை நிச்சயம் அன்பின் வெளிப்பாடுதான். அதுவும் அவள் சோகமாக இருக்கும்போது, நீங்கள் சென்றதும் இந்த மாற்றங்கள் தெரிந்தால், அவள் எதிர்பார்க்கும் ஆள் நீங்களேதான்.
9. கண்பேசும் வார்த்தைகள்போல் காதலைச் சொல்வது எதுவுமில்லை. நெருங்கி வராதபோதே நேசம் காட்டி அழைப்பவை கண்கள்தான். அவளின் அழகு, நடை, உடை, பாவனை, பண்பு எதுவோ உங்களை நேசிக்கத் தூண்டியிருக்கலாம். ஆனால் அவளின் கண் சிமிட்டல்கள்தான் உங்களை அருகில் செல்லவே அனுமதிக்கும். அவளின் முகம் மலர்ந்து, பொலிவான பார்வை புன்னகை வீசாத வரை, தேவையில்லாமல் நெருங்கி காதலுக்கு சமாதி கட்டிக் கொள்ளாதீர்கள்.
10. ஸ்தாய்போல நேசம் காட்டுகிறாளா? அடிக்கடி துரித உணவு சாப்பிடுவதை கண்டித்தல், வேண்டாத பழக்கங்களை விட்டுவிடச் சொல்லுதல், சின்னச்சின்ன தொல்லைகளைக்கூட பொருத்துக் கொள்ளுதல் என அன்பும், அக்கறையும் காட்டுகிறாளா? உங்களின் ஆரோக்கியத்திலும், முன்னேற்றத்திலும் கூடுதல் கவனம் காட்டுகிறாளா? இவைகள் கூட ஆழமான காதலின் அறிகுறிதான்.
பின்குறிப்பு: ஆழமான அன்பையும், நட்பையும் பெண்கள் அதிகமாகவே வெளிப்படுத்துவார்கள். பிரியமானவர்களுக்காக எதையும் செய்யவும் தயாராக இருப்பார்கள். ஆனால் அதை எல்லாம் காதலாகமட்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது.
No comments:
Post a Comment