Tuesday, June 5, 2012

சென்னை: நான் மட்டும் இசையமைப்பாளராக இருந்திருந்தால் இளையராஜாவை தலையணையில் அழுத்திக் கொன்றிருப்பேன். அவர் மீது அவ்வளவு பொறாமை எனக்கு, என்றார் கமல்ஹாஸன்.
இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய பால் நிலாப் பாதை, எனக்கு எதுவோ உனக்கும் அதுவே என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பால் நிலாப் பாதை புத்தகத்தை வெளியிட்ட கமல் பேசியதாவது:
இங்கு நான் எந்த ஒத்திகையும் இல்லாமல் பேச வந்திருக்கிறேன். இளையராஜாவைப் பற்றி பேச ஒத்திகை எதற்கு எந்தத மேடை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பேன். இந்த விழாவுக்கு சம்பிரதாயம் ஏதும் இல்லாமல் ஒரு சாமானியனாகவே வந்திருக்கிறேன்.
பல கெட்டிக்காரர்கள் இருப்பார்கள், ஆனால் ஊர் ஒத்துக்கொள்ள வேண்டுமே. அப்படி அனைவரும் ஒத்துக்கொண்ட ஒருவர் இளையராஜா.
அதற்குக் காரணம் அவரது எளிமை. அவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது கூட சொன்னார். இங்கு நமக்கு தண்ணீர் ஊற்றி குளிர வைத்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் நாம்தான் நமக்குள் இருக்கும் நெருப்பை அணையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
எங்கள் துறையில் புகழ் என்ற விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். நான் இளையராஜாவுக்கு பி.ஆர்.ஓ. (பத்திரிகை தொடர்பாளன்) போன்றவன். சம்பளம் தராவிட்டாலும் அவருடைய புகழைப் பரப்பிக்கொண்டே இருப்பேன். இரண்டு நாள்களுக்கு முன்பு அவருக்கு பிறந்த நாள் வந்தது. வாழ்த்தினீர்களா என சிலர் கேட்டனர்.
அய்யோ, அதையெல்லாம் நான் செய்ய மாட்டேன். வயதாவதை எல்லாம் அவருக்கு நினைவுபடுத்தக் கூடாது. அவர் அவருடைய வேலையை நிம்மதியாகச் செய்யட்டும்.
வயது கூடுதல் என்பது என்னைப் பொருத்தவரை வெறும் நம்பர் விஷயம்தான்.
அவரிடம் சில கவிதைகளை எழுதிக் காண்பிப்பேன். அதைப் படித்த கோபத்தில் மிகச் சிறந்த கவிதைகளை அவர் எழுதுவார். அதனால் அவருடைய புத்தகங்களைப் பற்றி நான் பேசப்போவதில்லை. பல வேலைகள் இருந்தாலும் இந்த விழாவுக்கு நான் வந்தே ஆக வேண்டும் என்பதால்தான் கலந்துகொண்டேன்.
ராஜாவிடம் இசை கற்றேன்...
நானும் அவரும் பல ஆண்டுகளாக பல விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறோம். இவர்கள் நண்பர்களா என்று மற்றவர்கள் சந்தேகப்படும் அளவுக்கு காரசாரமாக விவாதங்களை நடத்தியிருக்கிறோம். அவருடைய கோபத்தை எல்லாம் அவரது ஆர்மோனியப் பெட்டியில் வைத்துவிடுவார். காலத்துக்கும் தேவைக்கும் ஏற்றவாறு இசையாக வெளிப்படுத்துவார். அவரிடம் இருந்துதான் இசையைக் கற்றுக்கொண்டேன்.
நான் மட்டும் இசையமைப்பாளராக இருந்திருந்தால் இளையராஜாவை தலையணையில் அழுத்திக் கொன்றிருப்பேன். அவர் மீது அவ்வளவு பொறாமை எனக்கு. மற்றவர்களிடம் வேலை பார்க்கும்போது இதை என்னால் அதிமாக உணரமுடிந்திருக்கிறது.
அவருடைய தன்னம்பிக்கையை கர்வம் என்றோ திமிர் என்றோ கருதிவிடக் கூடாது. அவற்றையெல்லாம் தாண்டியவர் அவர். அவர் ஒரு பீடியாட்ரிசியன் (குழந்தைமருத்துவர்) போன்றவர். குழந்தை அழும். ஏன் என்று தெரியாது. ஆனால் அதன் குறிப்பறிந்து மருந்து கொடுப்பவர்தான் மருத்துவர். நானும் பல முறை அழுதிருக்கிறேன். எனக்கு ஏற்ற மருந்தை கொடுத்திருக்கிறார் இளையராஜா.
இவர்தான் இசைக் கடவுள்... நான் ஒப்புக் கொள்கிறேன்!
எவ்வளவு பழகினாலும் வியப்பு அடங்காத மாபெரும் மேதை அவர். இளையராஜாவை இசைக் கடவுள் என்றும் நான் அதை மறுக்க மாட்டேன் என்றும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் கூறினார். இதுதான் கடவுள். இவர்தான் கடவுள் என சொல்லுங்கள் நான் ஒத்துக்கொள்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு வகையில் பக்தி இருக்கும். நான் நம்பும் ஒன்றின் மீது நம்பும் ஒருவரின் மீதுதான் எனக்கு பக்தி செலுத்தத் தெரியும்.
இளையராவைப் பற்றி பல நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். 100 படங்களுக்கு மேல் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். யாருக்கும் வாய்க்காத எத்தனை எத்தனையோ அனுபவங்கள் இருக்கின்றன. எங்களுடைய நட்பு இன்னும் நீண்ட காலத்துக்கு நீடிக்கும்," என்றார் கமல்ஹாசன்.
இளையராஜா
இளையராஜா தனது ஏற்புரையில், "என்னை சிறு வயதில் பள்ளி உள்பட பல இடங்களிலும் முட்டாள், அறிவு கெட்டவன் என்றெல்லாம் பலர் திட்டியிருக்கிறார்கள். ஆனால் அவை எவையும் என்னை பாதித்ததில்லை. ஆனால் இப்போது எல்லோரும் புகழ்கிறார்கள். இதைத் தாங்கிக் கொள்வதுதான் சிரமமாக இருக்கிறது. புகழ் எவ்வளவு பெரிய போதை என்பது எனக்கு நன்கு தெரியும். அதனால்தான் சற்று விலகியே இருக்கிறேன். இசை என்பது மிக எளிமையான விஷயம். அதை ஏன் இவ்வளவு கடினமாக்கி சிக்கலாக்குகிறார்கள் எனத் தெரியவில்லை. இப்போதுள்ள இசை அப்படி ஆகிவிட்டது.
இன்று எங்கு பார்த்தாலும் கருத்து சொல்பவர்கள் நிரம்பியிருக்கிறார்கள். இறைவன் என்னை இசையோடோ இரு என பணித்துவிட்டார். அப்படிப்பட்ட இறைவனுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை," என்றார்.

No comments:

Post a Comment